மத்திய பிரதேசம்: சார்ஜ் போட்டபடி பார்த்த மொபைல் போன் வெடித்ததில் சிறுவன் காயம்

மத்திய பிரதேசத்தில் சார்ஜ் போட்டபடி கார்ட்டூன் படங்களை பார்த்த மொபைல் போன் வெடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.;

Update:2024-09-01 10:42 IST

சிந்த்வாரா,

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சாவ்ராய் நகரில் கல்கோதி திவாரி கிராமத்தில் வசித்து வருபவர் ஹர்தியால் சிங். இவர் தன்னுடைய மனைவியுடன் வயலில் வேலை பார்க்க சென்று விட்டார்.

வீட்டில் இவருடைய 9 வயது மகன் நண்பர்களுடன் இருந்துள்ளான். மொபைல் போனில் கார்ட்டூன் படங்களை பார்த்திருக்கிறான். அப்போது, மொபைல் போன் சார்ஜருடன் இணைக்கப்பட்டு, சார்ஜ் செய்யப்பட்டு கொண்டு இருந்தது.

இந்நிலையில், திடீரென மொபைல் போன் வெடித்து உள்ளது. இதில் சிறுவனின் கை மற்றும் தொடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனால், சிறுவன் சத்தம் போட்டுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டுக்காரர்கள் வந்து பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில், சிறுவனின் பெற்றோர் ஓடி வந்து அவனை மீட்டு, சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட பின் நிலைமை சீராக உள்ளது என டாக்டர் அனுராக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்