இந்தியா-பாகிஸ்தான் தேசிய கொடிகளை கீழிறக்கும் காட்சி வாகா எல்லை நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு வசதி ஜனவரி 1-ந்தேதி அறிமுகம்

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அட்டாரி-வாகா எல்லை சோதனை சாவடி அமைந்துள்ளது.;

Update:2022-12-07 01:30 IST

புதுடெல்லி, 

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அட்டாரி-வாகா எல்லை சோதனை சாவடி அமைந்துள்ளது. தினந்தோறும் மாலையில், அங்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் தத்தமது தேசிய கொடியை கீழே இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடி அணிவகுப்பும் நடக்கிறது.

இந்த கண்கொள்ளா காட்சியை காண தினந்தோறும் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம். இதற்கு முன்பதிவு எதுவும் கிடையாது. புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து, எல்லை பாதுகாப்பு படையினரின் அனுமதியுடன் அங்குள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து காணலாம்.

ஆனால், இருக்கை கிடைக்காமல் பலர் அங்குவரை வந்து திரும்ப வேண்டி இருக்கிறது. இதை கருத்தில்கொண்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை, ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான இணையதளத்தை எல்லை பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது.

பார்க்க விரும்பும் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். 12 பேர்வரை ஒரே குழுவாக முன்பதிவு செய்யலாம். இதற்கு கட்டணம் கிடையாது.

இருக்கைகளுக்கு எண் போடும் பணி நடக்கிறது. அந்த எண் அடிப்படையில், இருக்கை ஒதுக்கப்படும் என்பதால், முன்பதிவு செய்தவர்களுக்கு உறுதியாக இருக்கை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்