பெங்களூருவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.180 கோடி நிதி வீணாகும் அபாயம்
வளர்ச்சி பணிகள் தொடங்கப்படாததால் பெங்களூருவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.180 கோடி நிதி வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு:
வளர்ச்சி பணிகள் தொடங்கப்படாததால் பெங்களூருவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.180 கோடி நிதி வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ரூ.180 கோடி ஒதுக்கீடு
பெங்களூருவில் சாலை, ஏரிகள் உள்பட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சார்பில் ரூ.180 கோடி பெறப்பட்டது. வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
ஆனால் ஓராண்டை கடந்த நிலையிலும் இதுவரை அந்த நிதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். நிதி ஒதுக்கப்பட்டும், பணிகள் நடைபெறவில்லை என்றால், அந்த நிதியை மீண்டும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
ஏரிகளை சீரமைக்க...
இந்த நிலையில் பெங்களூருவில் 147 வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.180 கோடி நிதிக்கு முறையான திட்ட பணிகள் தொடங்கப்பட்டாலும், அவற்றை மாநகராட்சி செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
132 குடிநீர் வாரிய பணிகளுக்கு ரூ.32 ரூ.97 கோடியும், திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகளுக்கு ரூ.41 கோடியும் பெங்களூருவில் உள்ள சில ஏரிகளை சீரமைப்பதற்காக ரூ.41 கோடியும் ஒதுக்கப்பட்டது.
100 வார்டுகளில் ஆழ்துளை கிணறு
இந்த நிதியில் அம்ருதஹள்ளி, உளிமாவு, வெங்கய்யனகெரே, நாயண்டஹள்ளி மற்றும் பென்னிகானஹள்ளி ஏரிகளை புனரமைக்க அரசு ஒப்புதல் வழங்கியது. மேலும், 100 வார்டுகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும் அனுமதி பெறப்பட்டது. மேலும் ரூ.75 கோடி செலவில் சாலையை சுத்தம் செய்யும் எந்திரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர்கள் கோரப்பட்ட நிலையில், சாலை சுத்தம் செய்யும் எந்திரங்கள் வாங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், அனைத்து வளர்ச்சி பணிகளும், நிலுவை பணிகள் முடிந்ததும் தொடங்கப்படும். அதேசமயம் ஒதுக்கப்பட்ட நிதி மத்திய அரசுக்கு திரும்ப அனுப்பப்பட்டாலும் பாதிப்பு இல்லை என்றார்.
இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் ஒதுக்கப்பட்ட நிதி மத்திய அரசிடம் திரும்ப சென்றாலும் பிரச்சினை இல்லை என்று கூறலாம். வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதி திரும்ப சென்றால் இழப்பு நமக்கு தான். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கர்நாடக அரசு இணைந்து வளர்ச்சி பணிகளை விரைவாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.