அரசு அதிகாரி வீட்டில் லோக் அயுக்தா அதிரடி சோதனை
பெங்களூருவில் அரசு அதிகாரியின் வீடு உள்பட 15 இடங்களில் லோக் அயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அரசு அதிகாரிகள் மதுபான விடுதிகளை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரு :-
நில அளவீட்டு துறை மேற்பார்வையாளர்
கர்நாடகத்தில் ஊழல், பிற முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதுபோல், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தார் அலுவலகத்தில் நிலஅளவீட்டு துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சீனிவாச மூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் அயுக்தாவுக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து, அதிகாரி சீனிவாச மூர்த்தி குறித்த தகவல்களை போலீசார் திரட்டி வந்தனர். இந்த நிலையில், பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள சீனிவாச மூர்த்திக்கு சொந்தமான வீடு, கே.ஆர்.புரம் தாசில்தார் அலுவலகம், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசமூர்த்தியின் மனைவி வீடு, சீனிவாச மூர்த்தியின் சகோதரர்கள் வீடு என ஒட்டு மொத்தமாக 15 இடங்களில் ஒரே நேரத்தில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினார்கள்.
5 மதுபான விடுதிக்கான உரிமம்
இந்த சோதனையின் போது சீனிவாச மூர்த்திக்கு சொந்தமான வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், தங்க நகைகள், பணம் போலீசாருக்கு கிடைத்ததாக தெரியவந்துள்ளது. அதாவது சீனிவாச மூர்த்தி 5 மதுபான விடுதி நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கலால்துறையிடம் இருந்து வாங்கி வைத்திருந்த மதுபான விடுதிக்கான 5 உரிமம் தொடர்பான ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தது.
மேலும் லக்கேனஹள்ளியில் சீனிவாச மூர்த்தி புதிதாக ஒரு வீட்டையும் கட்டி முடித்திருந்தார். ஹெண்ணூருவில் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டு மனை, புதிதாக ஒரு கட்டிடம் கட்டுவது, கொத்தனூரில் மற்றொரு வீட்டுமனை இருப்பதற்கான சொத்து பத்திரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சீனிவாச மூர்த்தி மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணைக்காக அவருக்கு நோட்டீசு அனுப்பி வைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.