பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் லோக் அயுக்தா போலீசார் திடீர் சோதனை
வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் லோக் அயுக்தா போலீசார் திடீரென சோதனை நடத்தினார்கள். முக்கிய ஆவணங்களும், 3 இடைத்தரகர்களும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு:-
லோக் அயுக்தா சோதனை
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதாவது பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் ஒதுக்கப்படும் வீட்டுமனைகளை பணத்தை பெற்றுக் கொண்டு ஒதுக்குவதாகவும், குறிப்பாக சாலையோரம் இருக்கும் வீட்டுமனைகளை ஒதுக்குவதற்காக பொதுமக்களிடம் இருந்து அதிக பணம் பெறுவதுடன், லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்வது, பிற பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த நிலையில், பெங்களூரு வசந்த்நகர் அருகே உள்ள பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று லோக் அயுக்தா போலீசார் திடீரென்று சோதனை நடத்தினார்கள்.
பொதுமக்களிடம் புகார் மனு
அதாவது லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில 35 போலீசார், இந்த சோதனையை நடத்தினார்கள். 6 குழுக்களாக பிரிந்து பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது அலுவலகத்தின் 4 நுழைவு வாயில்களையும் போலீசார் பூட்டிவிட்டு, இந்த சோதனையை மேற்கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளின் அறைகளுக்கும் சென்று, அங்குள்ள ஆவணங்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
சோதனையின் போது அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்து பொதுமக்கள் வருவதற்கும் அனுமதிக்கவில்லை. இந்த சோதனையை போலீசார் வீடியோவும் எடுத்து கொண்டனர். அதே நேரத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் அலுவலகம் முன்பாக 2 போலீஸ் அதிகாரிகள் அமர்ந்து கொண்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது
இந்த நிலையில், லோக் அயுக்தா போலீசாரின் சோதனையின் போது அந்த அலுவலகத்தில் 3 இடைத்தரகர்கள் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிகாரி சாந்தராஜ் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதுபற்றி புகார் அளிக்க வந்திருப்பதாகவும் 3 இடைத்தரகர்களும் கூறினார்கள்.
அவர்கள் கூறுவது பொய் என்பதும், 3 பேரும் புகார் அளிக்க வரவில்லை, இடைத்தரகர்கள் தான் என்பதும் விசாரணையில் போலீசார் விசாரணையில் உறுதியானது. அதே நேரத்தில் போலீசாரின் சோதனையின் போது பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் இருந்து முறைகேடுகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அவற்றை கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுமக்களிடம் இருந்து புகார்கள்
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக லோக் அயுக்தாவுக்கு பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததால், போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். சோதனையின் போது கிடைக்கும் ஆவணங்கள் மூலமாக விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிந்த பின்பு தான், மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும்', என்றார்.
முன்னதாக சோதனை நடக்கும் போது லோக் அயுக்தா போலீஸ் ஐ.ஜி.யான சுப்பிரமணிஷ்வர் ராவும் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு சென்று, அதிகாரிகளிடம் விசாரித்ததுடன், அங்கிருந்த ஆவணங்களையும் பரிசீலனை நடத்தி இருந்தார். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய திடீர் சோதனை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.