மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் ரத்து: உரிமைக்குழு அறிக்கை தாக்கல்
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக உரிமைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.;
புதுடெல்லி,
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடந்த மாதம் 10-ந் தேதி, மழைக்கால கூட்டத்தொடரின்போது, பிரதமரின் உரைக்கு இடையே அடிக்கடி குறுக்கிட்டார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை, உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
உரிமைக்குழு முன்பு ஆஜரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அதையடுத்து, அவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய உரிமைக்குழு கடந்த மாதம் 30-ந் தேதி சிபாரிசு செய்தது. அதை அதே நாளில் ஏற்றுக்கொண்டு, இடைநீக்கத்தை சபாநாயகர் ஓம்பிர்லா ரத்து செய்தார்.
இந்நிலையில், இடைநீக்கத்தை ரத்து செய்ய சிபாரிசு செய்யும் உரிமைக்குழு அறிக்கை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்தில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். நாட்டில் ஒரு கட்சி சர்வாதிகாரம் திணிக்கப்படுவதாக மக்கள் மனங்களில் சந்தேகம் நிலவுவதாக அவர் பேசினார்.