மக்களவை தேர்தல்: 100 பேர் கொண்ட பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு

முதற்கட்டமாக 100 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதிசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-01 10:12 GMT

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக 100 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. உறுதிசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 100 பேர் கொண்ட பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக பா.ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்