சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல்; லோக் அயுக்தா விசாரணை
பெங்களூருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக லோக் அயுக்தா விசாரணையை தொடங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் 43 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், பிற முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் லோக் அயுக்தாவுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள 43 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சார் பதிவாளர் அலுவலகங்களில் சிக்கிய ஆவணங்கள் மூலமாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து லோக் அயுக்தா போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் முன்னிலையில் தொடங்கி உள்ளது. இந்த வழக்கில் எதிர்தரப்பு வாதமாக 51 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.