யஷ்வந்தபுரம் அரசு லாரிகள் முனையத்தில் லோக் அயுக்தா சோதனை

யஷ்வந்தபுரம் பகுதியில் உள்ள அரசு லாரிகள் முனையத்தில் லோக் அயுக்தா சோதனை நடத்தியது. இதில் ரூ.55 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.;

Update:2023-05-27 03:05 IST

பெங்களூரு:-

லாரிகள் முனையம்

கர்நாடகத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் தேவராஜ் அர்ஸ் லாரிகள் முனையத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. அந்த முனையத்தில் ரூ.55 கோடி அளவிற்கு மோசடி நடந்து இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி லோக் அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார், சாந்திநகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது 250-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கி இருந்தது. இந்த நிலையில் யஷ்வந்தபுரத்தில் உள்ள தேவராஜ் அர்ஸ் லாரிகள் முனையத்தில் நேற்று முன்தினம் லோக் அயுக்தா போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

விசாரணை

அப்போது இந்த முனையம் சார்பில் 500 லாரிகள் நிர்வகிக்கப்பட வேண்டியதற்கு பதிலாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான லாரிகள் நிர்வகிக்கப்பட்டது தெரிந்தது. மேலும் காசோலைகள் மூலமாக ரூ.55 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த கணக்கில் வராத காசோலைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி போலி நிறுவனங்களுக்கு தங்கள் சார்பில் டெண்டர்கள் ஒதுக்கியதும் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்தும் லோக் அயுக்தா அதிகாரிகள், லாரிகள் முனைய அதிகாரிகளிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்