கர்நாடகத்தில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் மதுபான விலை உயர்வு அமலுக்கு வந்தது.;

Update:2023-07-22 02:49 IST

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்சில் பெண்கள் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், 10 கிலோ அரிசி, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காங்கிரஸ் அரசு அமைந்திருப்பதால், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவது தவிர்த்து 4 இலவச திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை தேவையாகும்.

இதையடுத்து, கடந்த 7-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்-மந்திரி சித்தராமையா, மதுபானங்களுககான கலால் வரியை 20 சதவீதத்திற்கும், பீருக்கான கலால் வரியை 10 சதவீதமும் உயர்த்துவதாக அறிவித்திருந்தார். இதனால் மதுபானங்களின் விலை உயர்வது உறுதியாகி இருந்தது. ஆனால் இந்த விலை உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவித்தபடி கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது விஸ்கி, ரம், பிராந்தி உள்ளிட்ட மதுபானங்களின் விலை 20 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுபோல், பீர் விலையும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 60 மில்லி கொண்ட மதுபானத்தின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இலவச திட்டங்களை வழங்குவதற்காக மதுபானங்களின் விலையை அரசு உயர்த்துவது சரியான நடவடிக்கை இல்லை என்று மது பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்