நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்

நித்யானந்தா சாமியார் உடனடி மருத்துவ சிகிச்சை பெற தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.;

Update:2022-09-03 22:22 IST

கைலாச நாட்டில் நித்யானந்தா

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். 44 வயதான இவர், கர்நாடக மாநிலம், பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் மீது பல்வேறு பாலியல் பலாத்கார புகார்கள் எழுந்தன.

அவற்றில் அவர் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் ஈகுவடார் அருகே ஒரு தீவை வாங்கி கைலாசா என்ற இந்து நாட்டை 2019 டிசம்பரில் பிரகடனம் செய்தார். அங்கேயே அவர் வசிக்கவும் தொடங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பாக அவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவர் கடந்த ஜூலை 13-ந் தேதி பக்தர்கள் மத்தியில் தோன்றிப் பேசினார். அப்போது தான் குணம் அடைந்து விட்டதாகவும், மறு பிறவி எடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

தஞ்சம் கேட்டு இலங்கைக்கு கடிதம்

ஆனால் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அவருக்கு மருத்துவ ரீதியில் தஞ்சம் அளிக்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதை இலங்கை அரசு, இந்திய ஊடகம் ஒன்றிடம் உறுதி செய்துள்ளது. நித்யானந்தா சார்பில் கைலாசா நாட்டின் வெளியுறவு மந்திரி என்று கூறிக்கொண்டு நித்யபிரேமாத்மா ஆனந்த சுவாமி கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

இந்து மதத்தின் உயர்ந்த பீடாதிபதியான நித்யானந்த பரமசிவம் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. தற்போது கைலாச நாட்டில் உள்ள மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு அளித்து தீர்ந்துவிட்டன. அவரது உடல்நிலையின் பாதிப்பு என்ன என்பதை டாக்டர்களால் கண்டறிய முடியவில்லை. தற்போது அவர் கைலாச நாட்டில் உள்ளார். அங்கு அவருக்கு இந்த நேரத்தில் தேவைப்படுகிற மிக அவசர மருத்துவ சிகிச்சை கட்டமைப்பு இல்லை.

புகலிடம்

நித்யானந்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக அரசியல் புகலிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் அவர் அவசரமாக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அங்கு வந்து பாதுகாப்பாக சிகிச்சை பெற முடியும். துன்புறுத்தும் சக்திகளால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஒரு நாட்டின் தலைவராக அவர் பயணம் செய்வதே அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க சிறந்த வழி என நாங்கள் நம்புகிறோம்.

நித்யானந்தாவுக்கு தேவையான எந்தவொரு மருத்துவ சாதனத்தையும் கைலாச நாடு வாங்கத் தயாராக உள்ளது. அவருக்கு இலங்கையில் ஆகிற எல்லா மருத்துவ செலவுகளையும் கைலாச நாடு ஏற்கும். அதற்கு நன்றிக்கடனாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள மருத்துவ சாதனங்களை உங்கள் மக்கள் நலனுக்காக விட்டுச் செல்வோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்