9ம் வகுப்பு பாட புத்தகத்தில் 'டேட்டிங்' தலைப்பில் பாடம் - சி.பி.எஸ்.இ. விளக்கம்

இதற்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், சில தரப்பில் இருந்து ஆதரவுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

Update: 2024-02-03 22:46 GMT

புதுடெல்லி,

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் 'டேட்டிங் மற்றும் உறவுகள்' என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றதாக செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சில தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், சில தரப்பில் இருந்து ஆதரவுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்த இளம் வயதில் இதுபோன்ற கலாசாரத்தை மேன்மைப்படுத்தும் பாடம் அவசியமானதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டுள்ளனர். அதே சமயம் ஆதரவு தெரிவிப்பவர்களில் பலர், இந்த பாடப்பிரிவில் நவீன காலத்தில் இளம்பருவத்தினர் இடையே ஏற்படும் காதல் மற்றும் இணைய நட்பு, இணையதள காதல், சீண்டல் உள்ளிட்டவற்றை விளக்கமாக மாணவர்களுக்கு புரியும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு சி.பி.எஸ்.இ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம் தங்களது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. அவ்வாறு வெளியாகும் பாடத்தின் உள்ளடக்கம் ககன்தீப் கவுர் எழுதிய 'சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி' என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. இதனை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல் எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்