கேரளாவில் லத்விய நாட்டு பெண் பலாத்காரம், படுகொலை; 4 ஆண்டுகளுக்கு பின் தண்டனை அறிவிப்பு
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்த இடத்தில் லத்விய நாட்டு பெண் பலாத்காரம், படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரம் புறநகரில் உள்ள ஒரு மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக லத்வியா நாட்டில் இருந்து ஆண்ட்ரூ, அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி இல்ஜீ ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுலா வந்துள்ளனர்.
வந்த இடத்தில், ஆண்ட்ரூவின் மனைவி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி காணாமல் போனார். இதன்பின்பு, அவரது உடல் அதே ஆண்டில் ஏப்ரல் 20-ந்தேதி வர்கலா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணையில், பெண் பயணி பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கடைசியாக அந்த பெண் கோவளம் பகுதிக்கு வாடகை ஆட்டோவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவரை காணவில்லை. கடந்த காலத்தில் அந்த பெண் சற்று மனஅழுத்தத்தில் இருந்து, சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனால், குற்றவாளிகள் இரண்டு பேரும் வெள்ளை பீடி குடிக்கலாம் என கூறி வரும்படி அவரை அழைத்துள்ளனர். இது ஒரு வகை மரிஜூவானா என்ற போதை பொருள் கலந்த உள்ளூர் வகையை சேர்ந்த சிகரெட் ஆகும்.
இதன்பின்னர், பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து, குற்றவாளிகள் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது கழுத்து நெரித்து கொலை செய்த பின்பு, தற்கொலை போன்ற தோற்றம் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து உள்ளனர்.
இவர்கள் பதிவு செய்யப்படாத கைடுகளாக (வழிகாட்டி) செயல்பட்டு உள்ளனர். பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட அவர்கள், வன்முறை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருள் பயன்படுத்துபவர்களாக கடந்த காலங்களில் இருந்து உள்ளனர்.
உறவினர்களான உமேஷ் மற்றும் உதயன் குமார் ஆகிய இரண்டு பேரையும், திருவனந்தபுரம் கூடுதல் முதன்மை செசன்ஸ் கோர்ட்டு கடந்த 1-ந்தேதி குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதுபற்றி விசாரணை அதிகாரி ஜே.கே. பினில் கூறும்போது, நியாயம் வழங்கப்பட்டு உள்ளது. நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாததுடன், 38 நாட்கள் கழித்தே பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் கிடைத்தது. எனினும், நாங்கள் திட்டமிட்டு விசாரணை நடத்தி வழக்கை முடித்து உள்ளோம் என கூறியுள்ளார்.