பாபாபுடன்கிரி மலை பகுதியில் மண்சரிவு; பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாபாபுடன்கிரி மலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Update: 2022-06-15 15:17 GMT

சிக்கமகளூரு;

விபத்து தவிர்க்கப்பட்டது

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகாவில் பாபாபுடன்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி பகுதியில் உள்ள இந்த மலை கர்நாடகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இந்த மலை பகுதி இந்து மற்றும் முஸ்லிம்களின் புனித தலமாக உள்ளது. இதனால் வருடம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதியின் அழகை கண்டு ரசிக்க வாகனங்களின் வருகின்றனர். இந்த நிலையில் சிக்கமகளூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மிகவும் மக்கள் சிரமம் அடைந்தனர்.

3 நாட்கள் பெய்த கனமழைக்கு, பாபாபுடன்கிரி மலைப்பகுதியில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மணல் மேடானது. மண் சரிவின்போது அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோரிக்கை

எனினும், மண் சரிவால் சாலை முற்றிலும் ஸ்தம்பித்தது. இதனால் அந்த வழியாக வானங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், நீண்ட வரிசையில் வாகனங்கள் காந்திருக்கவேண்டிய நிலை உருவானது.. இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,அந்த பகுதி இருந்த பொதுமக்கள் உதவியுடன் பாறைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அனைத்து பாறைகளும் அகற்றப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து இயல்வு நிலைக்கு திரும்பியது.

இருப்பினும் சுற்றுலா தலமான பாபாபுடன்கிரி பகுதியில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் , அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்