குமாரசாமியின் பஞ்சரத்னா யாத்திரை முல்பாகலில் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராக குமாரசாமியின் முதல்கட்ட பஞ்சரத்னா யாத்திரை கோலார் மாவட்டம் முல்பாகலில் இருந்து இன்று(செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

Update: 2022-10-31 20:18 GMT

பெங்களூரு:

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேர்தல் பிரசாரம்

எங்கள் கட்சி சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதையொட்டி முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை கோலார் மாவட்டம் முல்பாகலில் நாளை(இன்று) தொடங்குகிறார். அப்போது அவர் 90 முதல் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை

அறிவிக்கிறார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.

அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்கட்டமாக 36 சட்டசபை தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இந்த யாத்திரை ஆனேக்கல் நகரில் நிறைவடையும். வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி 2-வது கட்ட யாத்திரையை குமாரசாமி தொடங்குவார்.

சுற்றுப்பயணம்

அப்போதும் 36 தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்து கட்சி கூட்டங்களில் பங்கேற்று பேசுவார். குமாரசாமியின் யாத்திரையுடன் 5 வாகனங்கள் பயணிக்கும். ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், வீட்டு வசதி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த பஞ்சரத்னா திட்டங்கள் குறித்து மக்களுக்கு வீடியோ மற்றும் ஆடியோ மூலம் தெரிவிக்கப்படும்.

அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டு பெற தனியாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூ.ஆர்.கோடு மூலமும் கருத்துகளை தெரிவிக்கலாம். ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்களுக்கு கருத்துகளை கேட்கும் படிவங்களை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த படிவங்களை வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.

பொதுமக்கள் ஆலோசனை

ஆட்சி நிர்வாகத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தில் பெரிய திரை வடிவமைக்கப்பட்டு, அதில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்