சிங்கப்பூரில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி-புகைப்படம் மூலம் விளக்கம் அளித்த குமாரசாமி

சிங்கப்பூரில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி என்று கூறிய டி.கே.சிவக்குமாருக்கு புகைப்படம் மூலம் குமாரசாமி பதில் கொடுத்துள்ளார்.

Update: 2023-07-27 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதாவுடன் கைகோர்த்து ஜனதாதளம் (எஸ்) கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் அரசை கவிழ்க்க இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்திருப்பதாக காங்கிரசார் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் சிங்கப்பூரில் இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் கர்நாடக துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார், சிங்கப்பூரில் இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அதாவது குமாரசாமி தான், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அவர் மறைமுகமாக கூறியிருந்தார். ஆனால் இதற்கு குமாரசாமி எந்த பதிலும் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் குமாரசாமி, டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது குடும்பத்தினருடன் பின்லாந்தில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர், முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படங்களை சமூக வலைதளங்களில் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் வைரலாக்கி, குமாரசாமி சிங்கப்பூரில் இல்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க அவர் முயற்சி செய்யவில்லை என்றும் கூறி டி.கே.சிவக்குமார், காங்கிரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்