ஓட்டு கேட்டு ஜனதா தளம் (எஸ்)எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதுவதா?-சித்தராமையாவுக்கு குமாரசாமி கண்டனம்
ஓட்டு கேட்டு ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ள சித்தராமையாவுக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஓட்டு கேட்டு ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ள சித்தராமையாவுக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
32 எம்.எல்.ஏ.க்கள்
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி சித்தராமையா ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை கண்டிக்கிறேன். அவரது இந்த செயல்பாடு, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 2 கண்களும் போக வேண்டும் என்பது போல் உள்ளது. அவர் பா.ஜனதா வெற்றி பெற உதவி செய்கிறார்.
இப்போது பா.ஜனதாவின் 'பீ-டீம்' யார் என்பது புரிகிறது. காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை தொடர்பு கொண்டு பேசி ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டேன்.
அழுத்தம் கொடுத்தார்
ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். முதலில் அவருக்கு மனசாட்சி உள்ளதா?. கடந்த 2009-ம் ஆண்டு சித்தராமையா பா.ஜனதாவில் சேர திட்டமிட்டார். இதை அவர் மறுக்க முடியுமா?. கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது சித்தராமையா எனக்கு அதிக அழுத்தம் கொடுத்தார்.
அந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் நான் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். கூட்டணி ஆட்சி கவிழ யார் காரணம்?. கடந்த 2016-ம் ஆண்டு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க் களை இழுத்தார். அதன் மூலம் எங்கள் கட்சி நிறுத்திய முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தார். தேவேகவுடாவை பிரதமர் ஆக்கியது காங்கிரசா?. பல்வேறு கூட்டணி கட்சிகள் சேர்ந்து அவரை பிரதமர் ஆக்கின.
மரியாதை கிடையாது
கர்நாடக காங்கிரஸ் கட்சியில் டி.கே.சிவக்குமார் உள்பட யாருடைய பேச்சுக்கும் மரியாதை கிடையாது. மேலிட தலைவர்களுக்கும் மரியாதை கிடையாது. சித்தராமையா பேச்சு தான் எடுபடுகிறது. என்னை முதல்-மந்திரி ஆக்கியதாக காங்கிரசார் சொல்கிறார்கள். பதவி தாருங்கள் என்று நான் கேட்கவில்லை. பா.ஜனதாவினரும் முதல்-மந்திரி பதவி வழங்குவதாக முன்வந்தனர்.
2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு சமாதி கட்டிவிட்டு சித்தராமையா செல்வார். டி.கே.சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆதரவு கேட்டேன். இது உண்மை தான். எங்கள் கட்சியின் சிவலிங்கேகவுடா எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு பேசினேன். ஜி.டி. தேவேகவுடாவும் வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.