பால் விலையை உயர்த்தி மக்கள் தலையில் காங்கிரஸ் 'பூ' வைத்தாக குமாரசாமி குற்றச்சாட்டு

பால் விலையை உயர்த்தி மக்களின் தலையில் காங்கிரஸ் அரசு ‘பூ’ வைத்துள்ளதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2023-07-22 18:45 GMT

பெங்களூரு:

பால் விலையை உயர்த்தி மக்களின் தலையில் காங்கிரஸ் அரசு 'பூ' வைத்துள்ளதாக குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மக்கள் தலையில் 'பூ'

காங்கிரஸ் அரசு ஒரு கையில் கொடுத்து விட்டு, மற்றொரு கையால் பிடுங்கி கொள்ளும் வேலையை செய்து வருகிறது. மாநிலத்தில் பால் விலையை அரசு ரூ.3 உயர்த்தி இருப்பது சரியானது இல்லை. சட்டசபை தேர்தலின் போது பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறி வந்தது. காங்கிரஸ் அரசு அமைந்து 2 மாதங்கள் ஆகியும் ஊக்கத்தொகை வழங்குவது பற்றி பேசவில்லை.

சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை அமைதியாக இருந்தனர். கூட்டத்தொடர் முடிந்ததும் பால் விலை, மதுபானங்களின் விலையை உயர்த்தி விட்டனர். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் காதில் 'பூ' வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு பால், மதுபானங்களின் விலையை உயர்த்தி மக்கள் தலையில் காங்கிரஸ் அரசு 'பூ' வைத்துள்ளனர்.

கஜானாவை நிரப்புவதில் கவனம்

அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசிக்கு பதில் பணம் கொடுத்து வருகின்றனர். அந்த பணத்திற்காக பால், மதுபானங்களின் விலையை உயர்த்தி சரி செய்துள்ளனர். 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் முன்பாகவே மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு தொந்தரவு கொடுத்திருந்தனர். இது தான் ஒருகையில் கொடுத்து விட்டு மறு கையால் மக்களிடம் இருந்து பிடுங்கும் செயல். காங்கிரஸ் அரசு அதைதான் செய்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்பாக விலைவாசி உயர்வு பற்றி பேசினார்கள்.

தற்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத அரசாக காங்கிரஸ் இருக்கிறது. மக்கள் பற்றியோ, விவசாயிகள் பற்றியோ எந்த கவலையும் இல்லை. விலையை உயர்த்தி கஜானாவை நிரப்புவதில் மட்டுமே காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்