நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள்; தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து

விளையாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கு பெற்று, பிரகாசிப்பதற்கான வேலைகளில் நம்முடைய அரசு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.;

Update:2024-08-29 12:08 IST

புதுடெல்லி,

இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஆக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், தேசிய விளையாட்டு தினத்திற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு நாம் இன்று அஞ்சலி செலுத்துகிறோம். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட மற்றும் இந்தியாவுக்காக விளையாடியவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் தருணமிது.

விளையாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் விளையாட்டில் பங்கு பெற்று, பிரகாசிப்பதற்கான வேலைகளில் நம்முடைய அரசு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என அவர் பதிவிட்டு உள்ளார்.

இந்திய ஆக்கி அணியில் இடம் பெற்ற தியான் சந்த், 1925 முதல் 1949 வரையிலான ஆண்டுகளில் 185 போட்டிகளில் விளையாடி 1,500 கோல்களை இந்தியாவுக்காக அடித்துள்ளார்.

அவர் விளையாடிய காலத்தில் முறையே 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு 3 தங்க பதக்கங்கள் கிடைத்தன. 1956-ம் ஆண்டு அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்