கூடங்குளம் துறைமுகம் அணுசக்தி கழகத்தால் நடத்தப்படுகிறது: மத்திய அரசு தகவல்

கூடங்குளம் துறைமுகம் அணுசக்தி கழகத்தால் நடத்தப்படுகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-20 21:29 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கேரள உறுப்பினர் ஒருவர், நாட்டில் உள்ள துறைமுகங்கள் மற்றும் அவற்றின் மேம்பாட்டுக்கு வழங்கிய நிதி உதவிகள் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனவால் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. 217 முக்கியம் அல்லாத துறைமுகங்கள் உள்ளன. இந்த முக்கியம் அல்லாத துறைமுகங்களில் 67 துறைமுகங்களில் சரக்கு கையாளப்படுகிறது. தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் துறைமுகங்களைப் பொறுத்தவரை ஒடிசாவில் 2-ம், ஆந்திராவில் 3-ம், குஜராத்தில் 4-ம், தமிழகத்தில் 6-ம், மராட்டிய மாநிலத்தில் 15-ம் உள்ளன.

தமிழகத்தில் காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், திருக்கடையூர், நாகப்பட்டினம் எண்ணெய் குழாம் மற்றும் கூடங்குளம் ஆகிய இடங்களில் முக்கியம் அல்லாத துறைமுகங்கள் உள்ளன. இதில் கூடங்குளம் துறைமுகத்தை இந்திய அணுசக்தி கழகம் நடத்துகிறது. துறைமுக திட்டங்களைப் பொறுத்தவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் 151 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை சுமார் ரூ.1891 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மந்திரி பதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்