கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கே.ஆா்.எஸ். அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் பெங்களூரு நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Update: 2023-08-26 18:45 GMT

பெங்களூரு:-

கே.ஆர்.எஸ். அணை

கா்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரு நகருக்கு மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அணையில் குறைவான தண்ணீரே இருப்பதால், பெங்களூரு நகருக்கு நீர் வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

பெங்களூரு நகருக்கு காவிரி திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களாக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பெங்களூரு நகரில் சுமார் 6 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பருவமழை சரியாக பெய்யவில்லை. மழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதற்கிடையே தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பெங்களூரு நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

பெங்களூரு நகரில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் டேங்கர் மூலம் வழங்கப்படும் தண்ணீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

19 டி.எம்.சி. தேவை

பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நகர் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தவிர்க்கவும், பிரச்சினையை சமாளிக்கவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தேவைப்படுகிறது. மாதம் 1½ டி.எம்.சி. தேவைப்படுகிறது.

ஏற்கனவே பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் 110 கிராமங்களுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் பெங்களூரு நகரம் மேலும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்