கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.;
புதுடெல்லி,
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடைபெற்று இருக்கிறது; என்ன மாதிரியான விவரங்கள் தெரியவந்துள்ளன; மேற்கொண்டு என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பவை உள்ளிட்ட விவரங்களை சிபிஐ, இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கு கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மருத்துவமாணவி பலியான சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? என கொல்கத்தா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு, சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதேபோல மேற்கு வங்க அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், 23 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கைகளை தற்போது நீதிபதிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.