அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை!

அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2022-08-26 06:39 GMT

கொல்கத்தா,

அன்னை தெரசாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக பிரார்த்தனை நடைபெற்றது.

கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி(தொண்டு நிறுவனம்) சபையின் நிறுவனரான அன்னை தெரசாவின் நினைவாக பிரார்த்தனை நடைபெற்றது.

மிஷனரிஸ் ஆப் சேரிட்டி சபையினர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.அன்னை இல்லத்தை சேர்ந்த சகோதரிகள் பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தனர்

இது குறித்து பேராயர் தாமஸ் டிசோசா கூறுகையில்:-

இது ஒரு சிறந்த நபரின் கொண்டாட்டம். அவரது ஒவ்வொரு பிறந்தநாளும் அனைவரின் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாகும். இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதன்மூலம், நாம் மற்றவர்களுக்கு ஒரு பரிசை வழங்க முடியும்.

ஆறுகள் தம் நீரைக் குடிப்பதில்லை, மரங்கள் தம் கனிகளைத் தாமே உண்பதில்லை. அதுபோல் பிறருக்காக வாழ்வது இயற்கையின் விதி.

அன்னை தெரசா இத்தகையதொரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் ஏழைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

ஆகவே அன்னை தெரசாவின் பிறந்தநாள் என்பது, நமது வாழ்க்கையை இறைவனுக்காகவும் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதற்கான கொண்டாட்டம் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இவ்வாறு பேராயர் தாமஸ் டிசோசா தெரிவித்தார்.

அன்னை தெரசாவின் உண்மையான பெயர் ஆக்னஸ் கோன்ஷா போஜாக்ஷியு என்பதாகும். 1910 இல் ஸ்கோப்ஜியில் அல்பேனிய இன குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா.

அவர் தன் 18 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அயர்லாந்தின் ராத்பார்ன்ஹாமில் அமைந்துள்ள 'சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ'வில் சேர்ந்தார்.

அவர் முதன்முறையாக 1920களின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். கொல்கத்தாவின் செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் வரலாறு மற்றும் புவியியல் கற்பித்தார்.

அதன்பின், 1948இல், அவர் தேவாலயத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படி இயலாதவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக கொல்கத்தாவில் உள்ள சேரி பகுதிகளில் ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினார்.

தொடர்ந்து 1950இல், அவர் ரோமன் கத்தோலிக்க மத சபைக்கு அடிக்கல் நாட்டினார். இப்போது மிஷனரிஸ் ஆப் சேரிட்டி என்று பிரபலமாக அறியப்படுகிறது.

மனிதகுலத்திற்கான அற்புதமான அன்னை தெரசாவின் சேவையை பாராட்டி கவுரவிக்கும் பொருட்டு அவருக்கு 1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அப்போதும் கூட, ரொக்கப்பரிசான 1 லட்சத்து 92 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை இந்தியாவின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக வழங்குமாறு நடுவர் மன்றத்தை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக அன்னை தெரசா அவர்கள் 1997இல் தனது 87 வயதில் காலமானார். அன்னை தெரசா, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, மத்திய அரசால் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

செப்டம்பர் 2017இல், அன்னை தெரசா கொல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் புரவலர் புனிதர் பட்டத்தை வாடிகன் போப் அறிவித்து கவுரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்