பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை - போலீஸ் கமிஷனர் உறுதி
பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் டாக்டர் நேற்று காலை பிணமாக மீட்கப்பட்டார். மருத்துவமனையின் 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பயிற்சி பெண் டாக்டர் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் பயிற்சி பெண் டாக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியை கைது செய்யக்கோரியும், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இக்குற்றச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் கூறுகையில், இது மிகவும் கொடூரமான குற்றம். கைது செய்யப்பட்ட நபர் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். கைது செய்யப்பட்ட நபர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்' என்றார்.