மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிஸ்தவர்கள் பேரணி
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோலார் தங்கவயலில் கிறிஸ்தவ அமைப்பினர் பேரணி நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
கோலார் தங்கவயல்:-
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கியது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசு தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர் கோலார் தங்கவயலில் அமைதி பேரணி நடத்தினர். இதில் கத்தோலிக்க மற்றும் பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோலார் தங்கவயலில் தங்கி படித்து வரும் மணிப்பூர் மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் பேரணி
கோலார் தங்கவயல் சாம்பியன்ரீப் பகுதியில் உள்ள தூய மரியன்னை பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த அமைதி பேரணிக்கு கோலார் மறைமாவட்ட பங்குதந்தை ஜெரோம் தலைமை தாங்கினார். ஆண்டர்சன்பேட்ைட, என்.எஸ்.சி. போஸ் ரோடு, சுராஜ்மல் சர்க்கிள் வழியாக சென்ற இந்த பேரணி, ராபர்ட்சன்பேட்டையில் உள்ள மலையாளி லைன் மைதானத்தை வந்தடைந்தது. அதேபோல உரிகம் பகுதியில் தொடங்கிய அமைதி பேரணி 5 விளக்கு சாலை வழியாக வந்து மலையாளி லைனை வந்தடைந்தது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் மணிப்பூர் கலவரத்திற்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தியப்படி வந்தனர். இறுதியாக மலையாளி ைலன் மைதானத்தில் மணிப்பூர் கலவரத்திற்கு தீர்வு காண கோரியும், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு கோரியும், சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.