சினிமா பாணியில் சாலையில் சாகசம்: காரில் நீச்சல் குளம் அமைத்த யூடியூப்பர் - அடுத்து நடந்த சம்பவம்

நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று சஞ்சு டெக்கி, தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார்.;

Update:2024-05-31 03:13 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி (வயது 28). பிரபல யூடியூப்பரான இவர் தனது சேனலில் ஏராளமான வீடியோக்களை வித்தியாசமாக செய்து பதிவிட்டு வருகிறார். அதன் மூலமாக கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று சஞ்சு டெக்கி, தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார்.

அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே சாலையில் சாகசம் பயணம் மேற்கொண்டார். அந்த காரை ஓட்டிச் சென்ற காட்சியை அவர் தனது யூ-டியூப் சேனலில் நேரலையில் பகிர்ந்தார். அப்போது ஓரிடத்தில் கார் திடீரென நின்றது. இந்த நிலையில் காருக்குள் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் கசிந்து என்ஜினுக்குள் புகுந்திருக்கிறது. அந்த சமயத்தில் காரின் பக்கவாட்டில் இருந்த ஏர்பேக் வெடித்தது. உடனே காருக்குள் நிரப்பப்பட்டு இருந்த தண்ணீரை சாலையில் திறந்து விட்டுள்ளனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சஞ்சு டெக்கி காரில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் குளித்த காட்சிகளை நேரலையில் பகிர்ந்த படி இருந்ததால், அதன்மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளும் அதில் வெளியாகின. இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். அதே சமயத்தில் அந்த வீடியோவை அவர் போக்குவரத்துதுறையிடம் சிக்குவதற்கு காரணமாக அமைந்தது.

உடனே ஆலம்புழை போக்குவரத்து துறை போலீசார் சஞ்சு டெக்கியை பிடிக்க சென்றனர். இதனை அறிந்த அவர் தனது காரை கொல்லம் நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். எனினும் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். இதுதவிர சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்