கேரளாவில் புதிய வகை காய்ச்சலுக்கு 2 பேர் சாவு: எலியில் இருந்து பரவுகிறதா?

கேரளாவில் புதிய வகை காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2022-06-12 21:50 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் செள்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 8-ந் தேதி வர்க்கலையில் செள்ளு காய்ச்சல் பாதித்து 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில், திருவனந்தபுரம் பரசுவை கல்லை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், செள்ளு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு செள்ளு காய்ச்சல் தவிர சிறுநீரக பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது.

செள்ளு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 2 பெண்கள் இறந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- ஸ்கிராப் டைபஸ் எனப்படும் ஒரியன்ஷியா சுசுகாமுஷி பாக்டீரியா பாதிப்பு காரணமாக செள்ளு காய்ச்சல் ஏற்படுகிறது. எலி, அணில், முயல் போன்றவைகளுக்கு இதுபோன்ற நோய் தொற்று ஏற்படுவது வழக்கம். இது போன்ற சிறிய பிராணிகளில் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. ஆதலால் நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்