நீட் தேர்வு: மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றிவிட்டு தேர்வெழுத சொன்னதால் பரபரப்பு! விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வற்புறுத்தியதாக, அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

Update: 2022-07-18 13:48 GMT

திருவனந்தபுரம்,

நீட் தேர்வு மையத்தில் ஒரு மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வற்புறுத்தியதாக, அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

நீட் தேர்வெழுதுவதற்கு முன், மாணவிகள் உள்ளாடைகளை கழற்றிவிட்டு தேர்வெழுத செல்லுமாறு அங்குள்ள அதிகாரிகள் வலியுறுத்தியதாக கொட்டாரக்கரா போலீசிடம் புகாரில் தெரிவித்தார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒருவர், தன் மகளை நீட் தேர்வு எழுதுவதற்கு கேரளாவின் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அங்கு தேசிய தேர்வு முகமையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், ஒவ்வொரு மாணவ மாணவியரையும் தனித்தனியே பரிசோதித்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்ததில், மாணவிகளின் உள்ளாடைகளில் காணப்படும் "கொக்கி" கண்டறியப்பட்டதாக எனது மகளிடம் கூறப்பட்டது. உடனே கொக்கிகளை அகற்றும்படி கூறப்பட்டது. இல்லாவிட்டால் உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

நீட் தேர்வு மைய ஊழியர்கள் மாணவிகளிடம், "இதை விட முக்கியமானது என்ன? உங்கள் எதிர்காலம் முக்கியமா அல்லது உள்ளாடைகளா?" என்று மிரட்டும் தொனியில் பேசினர்.

இதன்காரணமாக, தேர்வெழுத வந்திருந்ததில் ஏறக்குறைய 90 சதவீத மாணவிகள் தங்கள் உள்ளாடைகளை கழற்றி ஒரு அறையில் வைக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை உருவானது.

மேலும், உள்ளாடையின்றி இத்தகைய பதின்பருவ பெண்கள் தேர்வெழுதும்போது, அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபோன்ற முரட்டுத்தனமான நடத்தை மூலம் மாணவிகள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தங்கள் உள்ளாடைகளின் கொக்கிகளை அறுத்து வீசிவிட்டு, ஆடையை கொக்கியில்லாமல் கட்டிக்கொண்டு அதன்பின், தேர்வெழுதினர்.

இதனால் அவர்களால் எளிதாக தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், கேரளாவின் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் உள்ள மையம் இதை மறுத்துள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட பின், அவரது மகளின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

கொல்லத்தில் வெடித்த சர்ச்சை குறித்து உரிய விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்