சாம்ராஜ்நகரில் அதிகரித்து வரும் கேரள லாட்டரி சீட்டு விற்பனை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சாம்ராஜ்நகரில் அதிகரித்து வரும் கேரள லாட்டரி சீட்டு விற்பனையை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொள்ளேகால்;
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் ஹங்கலா, பேகூரு, தெரக்கனாம்பி பகுதியில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கேரள லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த லாட்டரிகள் அனைத்தும் கேரளா மாநிலம் வயநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விற்பனையில் ஏராளமான இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளிகளை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு லாட்டரி சீட்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலையையும் பொருட்படுத்தாமல் பலர் லாட்டரி சீட்டுகளை வாங்கி, பணத்தை இழந்தது மட்டுமின்றி குடும்பத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
இதனால் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பல் துணிகரமாக, பொது இடங்களில் வைத்து விற்பனை செய்யும் நிலைக்கு வந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.