கெஜ்ரிவாலின் உடல்நிலை விவரம்... கவர்னருக்கு அறிக்கை அனுப்பியது திகார் சிறை நிர்வாகம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த சரிவிகித உணவு திட்டத்தில் கடுமையாக தடை செய்த பல உணவுகளையே கெஜ்ரிவால் சாப்பிட்டு வருகிறார் என திகார் சிறை நிர்வாகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.;

Update:2024-04-20 22:09 IST

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, வருகிற செவ்வாய் கிழமை (23-ந்தேதி) வரை அவருடைய காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. கெஜ்ரிவாலுக்கு உடல்நல பாதிப்புகளை முன்னிட்டு, வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அவருடைய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால், வீட்டில் இருந்து எடுத்து வரப்படும் உணவு, படுக்கை விரிப்புகள், மருந்துகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய சர்ச்சை ஒன்று எழுந்தது. அதில், டைப்-2 வகை நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால் அதற்கான மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில், அவர் காணொலி காட்சி வழியே தன்னுடைய குடும்ப மருத்துவரிடம் பேசினார். அப்போது அவர், இன்சுலின் வேண்டும் என்று கேட்டு கொண்டார். எனினும், சிறை நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்து விட்டது என கூறப்பட்டது.

இதுபற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார்.

கெஜ்ரிவால் மெதுவாக மரணம் அடைவதற்கான சதித்திட்டம் ஒன்று நடந்து வருகிறது என முழு பொறுப்புணர்வுடன் கூற விரும்புகிறேன் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இதேபோன்றதொரு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் கூறினார். சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது. அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று கூறினார். இதேபோல், டெல்லி மந்திரி அதிஷி கூறும்போது, கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை மறுக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் உடல்நிலை பற்றி டெல்லி திகார் சிறை நிர்வாகம், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு அனுப்பிய அறிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன. அதில், சில மாதங்களுக்கு முன் கெஜ்ரிவால் இன்சுலினை நிறுத்தி விட்டார். அவர் கைது செய்யப்படும்போது, நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக சாப்பிட கூடிய மருந்துகளையே எடுத்து வந்திருக்கிறார் என தெரிவித்து உள்ளது.

திகார் சிறையில் பரிசோதனையின்போது, கெஜ்ரிவால் டாக்டர்களிடம் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக இன்சுலின் எடுத்து வந்தேன். அதனை சில மாதங்களாக நிறுத்தி விட்டேன் என கூறினார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

திகார் சிறை நிர்வாகம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எழுதிய கடிதம் ஒன்றில், அதிக சர்க்கரை கொண்ட உணவுகளான இனிப்புகள், லட்டு, வாழைப்பழம், வறுத்த உணவு, புஜியா, நம்கீன், இனிப்பூட்டப்பட்ட தேநீர், பூரி-ஆலூ, ஊறுகாய்கள் மற்றும் பிற கொலஸ்டிரால் அதிகம் கொண்ட உணவுகளை வழக்கம்போல் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார் என தெரிவித்து இருந்தது. அதனால், அவருக்கான சரிவிகித உணவு முறையை தெரிவிக்கும்படியும் சிறை நிர்வாகம் கேட்டிருந்தது.

இதில், எய்ம்ஸ் மருத்துவமனை சரிவிகித உணவு திட்டத்தில் கடுமையாக தடை செய்தவற்றில் பல உணவுகளையே அவர் சாப்பிட்டு வருகிறார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. சிறையில் போதிய அளவு இன்சுலின் கைவசம் உள்ளது. தேவைப்படும்போது, கெஜ்ரிவாலுக்கு அது செலுத்தப்படும் என அறிக்கை தெரிவிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்