மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்: விநாயகர், லட்சுமி படத்தை உடனடியாக அச்சடிக்க பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்தை உடனடியாக அச்சடிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-10-28 07:51 GMT

புதுடெல்லி,

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறம் விநாயகர் மற்றும் லட்சுமி படங்களும் இருக்க வேண்டும் என்பதே 130 கோடி இந்தியர்களின் விருப்பமாக உள்ளது.

இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், வளரும் மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. இன்றும் நமது நாட்டில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். ஏன் ?

ஒருபுறம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம் நமது முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் தேவை. சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் இவைகளின் மூலம் மட்டுமே நாடு முன்னேறும்.

நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதனை வெளிப்படையாக கூறினேன். அப்போது இருந்து, இதற்கு பொது மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்