'ஸ்வீட் சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்' - அமலாக்கத்துறை

சிறையில் கெஜ்ரிவால் அடிக்கடி மாம்பழம், ஸ்வீட் ஆகியவற்றை சாப்பிடுகிறார் என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-04-18 11:40 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 10 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்ட கெஜ்ரிவால், தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கெஜ்ரிவால் தனது இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் அனுமதி அளிக்கக் கோரி டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு சீராக இல்லை என்றும், அவர் தனது வழக்கமான மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில், "கெஜ்ரிவால் தனக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கூறுகிறார், ஆனால் அடிக்கடி மாம்பழம், சர்க்கரையுடன் தேநீர், ஸ்வீட் ஆகியவற்றை சாப்பிடுகிறார். கெஜ்ரிவால் வேண்டுமென்றே தனது இரத்த சர்க்கரை அளவை சீரற்றதாக்கி ஜாமீன் கோருவதற்காக இவ்வாறு செய்கிறார்" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறையினர் ஊடக விளம்பரத்திற்காக இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாகவும், மற்றொரு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், கெஜ்ரிவாலின் உணவு முறை குறித்து சிறை அதிகாரிகளிடம் மருத்துவ அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்