2024 தேர்தலில் மோடிக்கு மாற்றாக மக்கள் கெஜ்ரிவாலை பார்க்கின்றனர் - மணீஷ் சிசோடியா

மோடிக்கு மாற்றக மக்கள் கெஜ்ரிவாலை பார்ப்பதாக மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-21 15:38 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே, இவ்வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்றுமுன் தினம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா பிடிஐ செய்தி முகமைக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது;

தேசிய அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் செல்வதற்கான வாய்ப்புகள் வந்துள்ளது. 2024 தேர்தலில் மோடிக்கு மாற்றாக மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை பார்க்கின்றனர். ஏனென்றால் கெஜ்ரிவால் சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பேசுகிறார். பாஜக, டெல்லி கவர்னர், டெல்லி தலைமை செயலாளர் ஆகியோர் கெஜ்ரிவாலை தடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவ்வாறு செய்யாவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிடும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்