நிலப்பிரச்சினை: பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை - பெங்களூருவில் கொடூர சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2024-01-04 10:55 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திகடி கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு, அவரது மாமா தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய கொடுத்திருந்தார். அதன்படி, அந்த பெண்ணும் அங்கு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவியான கல்பனா என்பவரின் கணவர் கல்லப்பா, அந்த பெண்ணுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக கூறியதுடன், அங்கு தண்ணீர் குழாய்களை பதித்திருந்தார்.

அந்த குழாயில் இருந்து அடிக்கடி தண்ணீர் கசிந்து அந்த பெண்ணின் நிலத்திற்கு சென்றதுடன், அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்து வந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அந்த பெண் கொண்டு சென்றிருந்தார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு சொந்தமான நிலத்தில் பதிக்கப்பட்டு இருந்த தண்ணீர் குழாய்கள் வெளியே எடுத்து அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணுக்கும், கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக பைலஓங்கலா போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த கல்லப்பா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்தும் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி 2-வது முறையாகவும் அவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து பெலகாவி மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நிலப்பிரச்சினையில் தனது ஆடைகளை அவிழ்த்து பஞ்சாயத்து தலைவரின் கணவர் உள்பட 20 முதல் 25 பேர் தாக்குதல் நடத்தினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அழைத்து சென்று அடைத்து சிறை வைத்ததுடன், அங்கு வைத்தும் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தும் போது எனது உடலில் கையை வைத்து பாலியல் தொல்லையும் கொடுத்தார்கள். காலால் மிதித்து தாக்கினார்கள்.

அத்துடன் எனது செல்போன், பணத்தையும் பறித்துக்கொண்டனர். சம்பவத்தை வெளியே கூறக் கூடாது என தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் அவர் கூறியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்து தலைவி கல்பனாவின் கணவர் கல்லப்பா உள்பட 20 பேர் மீது மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலப்பிரச்சினையில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி தாக்கி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்