கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்? - பா.ஜனதா மேலிடம் தீவிர ஆலோசனை

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பா.ஜனதா மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

Update: 2023-06-17 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பா.ஜனதா மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

சட்டசபை தேர்தலில் தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறி கொடுத்தது. இதையடுத்து, மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்றவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தவிர்த்து வேறு ஒருவருக்கு வழங்கவும் பா.ஜனதா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம்(ஜூலை) 3-ந் தேதி தொடங்க உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024) நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக மாநில தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் யத்னால்?

இந்த நிலையில், மாநில தலைவராக இருக்கும் நளின்குமார் கட்டீலை மாற்றிவிட்டு, முன்னாள் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயணை நியமிக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதுபோல், எதிர்க்கட்சி தலைவராக பசனகவுடா பட்டீல் யத்னாலை நியமிப்பது குறித்து கட்சி மேலிட தலைவர்கள் சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களின் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போனது தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணை கர்நாடக மாநில தலைவராகவும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த யத்னாலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவும் பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

20 தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது, அவ்வளவு எளிது இல்லை. அதே நேரத்தில் குறைந்தபட்சம் 15 தொகுதிகள் முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக லிங்காயத் மற்றும் ஒக்கலிக சமூகத்தினருக்கு எதிர்க்கட்சி மற்றும் மாநில தலைவர் பதவியை வழங்கி மாநிலத்தில் பா.ஜனதாவை பலப்படுத்த கட்சி தலைவர்கள் முன்வந்துள்ளனர். மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பது குறித்து கூடிய விரைவில் பா.ஜனதா மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்