ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு: கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஐதராபாத் விமானத்தை தவறவிட்டார்

ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஐதராபாத் விமானத்தை தவறவிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஏர் ஏசியா நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-07-28 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் ஐதராபாத் செல்வதற்காக பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அவரது விமானம் மதியம் 2.05 மணிக்கு செல்ல இருந்தது. இதனால் கவர்னர் மதியம் 1.35 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரது அதிகாரிகள், கவர்னரின் பொருட்களை விமானத்தில் வைத்துவிட்டு வந்தனர். அங்கு விமானம் புறப்பட இன்னும் நேரம் இருப்பதாக கூறி கவர்னரை முக்கிய பிரமுகர்களின் ஓய்வறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் அமர வைத்தனர். ஆனால் விமானத்திற்கு நேரம் ஆனதை அவர் கவனிக்கவில்லை.

மேலும் நேரத்தை கவனிக்க அதிகாரிகளும் தவறிவிட்டனர். இதனால் ஒரு நிமிடம் தாமதமாக கவர்னர் விமானத்தில் ஏற வந்தார். விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்திருந்தனர். ஆனால் கவா்னரை விமானத்தில் ஏற அதன் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் கவர்னா் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அங்கு இருந்த அவரது அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகள் எடுத்துக் கூறியும் விமான ஊழியர்கள் கவர்னரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து விமானத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது பொருட்கள் கீழே எடுத்து வரப்பட்டன.

நேரத்தை சரியாக கவனிக்காமல் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளை கவர்னர் கோபத்துடன் கடிந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் 1½ மணி நேரத்திற்கு பிறகு அடுத்த விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அவர் அங்கிருந்து கார் மூலம் ராய்ச்சூருக்கு சென்று அங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் கவர்னரை விட்டுவிட்டு சென்ற ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் மீது விமான நிலைய போலீசில் கவர்னர் அலுவலக அதிகாரி வேணுகோபால் புகார் செய்தார்.

அதில் புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் பகல் 2.05 மணிக்கு ஐதராபாத் செல்லும் 'ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட்' விமானத்தில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதற்காக கவர்னர் மதியம் 1.10 மணிக்கு ராஜ்பவனில் இருந்து புறப்பட்டார். 1.35 மணிக்கு விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு சென்றதும் அவரது பொருட்கள் விமானத்தில் ஏற்றப்பட்டன. அதன் பிறகு அவர் வி.ஐ.பி. ஓய்வறையில் அமர்ந்திருந்தார். அங்கு பணியாற்றும் சான்ஸ்கிருதி, கவர்னர் விமானத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

2-வது முனையத்தில் விமானம் இருப்பது குறித்து கவர்னரின் அதிகாரிக்கு தெரிவித்தோம். சரியாக மதியம் 2.06 மணிக்கு கவர்னர் அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்த படிக்கட்டு பகுதிக்கு சென்றார். அப்போது விமான ஊழியர், நீங்கள் தாமதமாக

வந்துள்ளீர்கள் என்று கூறி கவர்னரை விமானத்திற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார். அப்போது விமானத்தில் கதவுகள் திறந்த நிலையில் இருந்தன. கவர்னரின் பொருட்களை வெளியே எடுக்க 10 நிமிடங்கள் வீணானது.

அந்த நேரத்தில் கவர்னர் அங்கேயே நின்று இருந்தார். விமான வாயில் கதவுகள் இன்னமும் திறந்தபடி இருந்தன. ஆனாலும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அவரை புறக்கணித்து அவமதித்துள்ளனர். பின்னர் கவா்னர் ஓய்வறைக்கு திரும்பினார். 90 நிமிடங்களுக்கு பிறகு வேறு ஒரு விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவம் கவர்னரை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. அவர் கர்நாடகத்தின் முதல் குடிமகன். விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன. அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏா் ஏசியா, ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட் நிறுவனங்களின் அதிகாாிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

=====

Tags:    

மேலும் செய்திகள்