முழுஅடைப்பு போராட்டங்கள் காரணமாக கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

முழுஅடைப்பு போராட்டங்களால் போக்குவரத்து துறை மற்றும் மதுபானம் விற்பனை பாதிப்பால் கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-30 18:45 GMT

பெங்களூரு:-

பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்தும், காவிரியில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட கோரியும் கடந்த 26-ந்தேதி பெங்களூருவில் முழுஅடைப்பும், நேற்று முன்தினமும் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் கர்நாடக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முழுஅடைப்பு போராட்டங்களால் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.), கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மற்றும் மெட்ரோ ரெயில் கழகம் ஆகியவற்றுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடி ரூபாய் இந்த 3 நிறுவனங்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை

அதாவது மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒரு நாள் வருவாய் ரூ.1.60 கோடி முதல் ரூ.1.70 கோடி ஆகும். கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.9 முதல் ரூ.10 கோடி வரையும், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடியும் வருமானம் கிடைக்கும். ஆனால் முழுஅடைப்பு காரணமாக கடந்த 26-ந்தேதியும், நேற்று முன்தினமும் இந்த 3 நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல் பெங்களூருவில் சுமார் 5 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இரு நாட்கள் நடந்த முழுஅடைப்பால் ரூ.100 முதல் ரூ.120 கோடிக்கு ஓட்டல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை தவிர்த்து மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. நேற்று முன்தினம் நடந்த முழுஅடைப்பால் இந்த ஓட்டல்களில் ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மது விற்பனை பாதிப்பு

மேலும் பெங்களூருவில் அரசு, தனியார் என ஒட்டுமொத்தமாக 3 ஆயிரத்து 850 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் முழுஅடைப்பு காரணமாக கடந்த 26-ந்தேதி மற்றும் நேற்று முன்தினமும் மூடப்பட்டு இருந்தன. இதனால் ரூ.180 முதல் ரூ.200 கோடி மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்