கர்நாடகாவில் அதிர்ச்சி: பொக்கிஷத்துக்கு ஆசைப்பட்டு... காரில் எரிந்த நிலையில் 3 உடல்கள்
6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, இந்த படுகொலைகளை செய்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
துமகுரு,
கர்நாடகாவின் துமகுரு மாவட்ட தலைமையகத்தில் குசாங்கி கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றில் 3 உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், சில விசயங்கள் தெரிய வந்துள்ளன.
சம்பவம் பற்றி துமகுரு போலீஸ் சூப்பிரெண்டு அசோக் கூறும்போது, ஒரு கும்பல் தங்களுக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொக்கிஷம் கிடைத்துள்ளது என்றும் அவற்றை மிக குறைந்த விலைக்கு தருகிறோம் என கூறி 3 பேரையும் கவர்ந்து இழுத்துள்ளது.
அதனை வாங்கி கொள்ள பணம் கொண்டு வரும்படி கூறியுள்ளனர். இதனை நம்பி 3 பேரும் நிறைய பணத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், கொலை கும்பல் 3 பேரையும் கொலை செய்து, அவர்களிடம் இருந்த பெரிய தொகையை கொள்ளையடித்து விட்டு, உடலை காருடன் சேர்த்து எரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அந்த 3 பேரும் கர்நாடகாவின் மங்களூரு நகரில் துமகுரு மாவட்டத்தில் பெல்தங்காடி தாலுகாவை சேர்ந்தவர்கள் ஆவர். 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து, இந்த படுகொலைகளை செய்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றிய தடய அறிவியல் பரிசோதனையில் அவர்கள் வேறு பகுதியில் வைத்து கொல்லப்பட்டு, பின்னர் துமகுரு பகுதிக்கு கொண்டு வந்து இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.