கர்நாடக மந்திரிசபை விரைவில் விரிவாக்கம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதி
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
மந்திரிசபை விரிவபாக்கம்
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பசவராஜ்பொம்மை உள்ளார். மந்திரிசபையில் 36 பதவி இடங்கள் உள்ளன. இதில் 6 இடங்கள் காலியாக உள்ளன. முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பிறகு 4 இடங்கள் காலியாக இருந்தது. அதன் பிறகு ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியும், ஒப்பந்ததாரர் தற்கொலையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மந்திரிசபையில் காலி இடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
மந்திரிசபை விரிவாக்கத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருந்தார். ஆனால் கட்சி மேலிடம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில தேர்தல்களால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் பரபரப்பாகிவிட்டனர். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போனது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன.
விரிவான விவாதம்
இந்த நிலையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும் மனநிலையில் பா.ஜனதா மேலிடம் உள்ளது. விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் விரிவான விவாதம் நடைபெற்று உள்ளது. எனக்கு கிடைத்துள்ள தகவல்படி, விரைவில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். வெகு விரைவிலேயே இந்த மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும், எந்தெந்த சமூங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும், மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நான் எடுத்து கூறியுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
புதிய மந்திரிகள்
மந்திரிசபையில் அனைத்து முக்கியமான சமூகங்களுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி அதன் மூலம் அந்த சமூகங்களின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.
ஆனால் தற்போது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து, அதன் மூலம் வரும் புதிய மந்திரிகளுக்கு பணியாற்ற காலஅவகாசமே இல்லாத நிலை உள்ளது. இந்த மாதத்தில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றாலும், அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.