கர்நாடகா: பாஜகவில் இருந்து மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ. விலகல்..!
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பீதர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சூர்யகாந்த் நாகமரபள்ளி. இவருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூர்யகாந்த் நாகமரபள்ளி, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார். மேலும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர உள்ளார். இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றுடன் சூர்யகாந்த் நாகமரபள்ளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்.பி.யாக இருந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வந்தார். ஆனால் எம்.பி.யாக இருக்கும், யாருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பா.ஜனதா மேலிடம் கரடி சங்கண்ணாவிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.