கார்கேவா? சசி தரூரா?... காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நிறைவு; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சி தலைவரை முடிவு செய்யும் தேர்தலுக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.யான மதுசூதன் மிஸ்திரி தேர்தலுக்கு முந்தின நாளான நேற்று விளக்கினார்.
அதில், வாக்கு பதிவு காகிதத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும் (மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர்). வாக்காளர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளருக்கு முன்னால் உள்ள அதற்கான கட்டத்தில் டிக் மட்டும் செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக, கட்டத்தில் வேறு எந்த அடையாளமோ அல்லது ஏதேனும் எண்களை எழுதுவதோ அந்த வாக்கை செல்லாத ஒன்றாக்கி விடும் என அவர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தில் இருந்து வராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று தொடங்கியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குபதிவு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது.
தமிழகத்தில் இருந்து மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர்.
இந்நிலையில், கார்கே அல்லது சசி தரூர் என்ற இருவரில் யார் அடுத்த தலைவர் என்ற போட்டிக்கான வாக்கு பதிவு நிறைவடைந்து உள்ளது. அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் யாரென்ற முடிவுகள் அறிவிக்கப்படும்.