காஷ்மீர்: போலீஸ் நிலையத்தில் இருந்து பயங்கரவாதிகள் தப்பியோட்டம்
காஷ்மீரில் போலீஸ் நிலையத்தில் இருந்து 2 பயங்கரவாதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மதுபான கடையில் கடந்த ஆண்டு மே மாதம் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மதுபான கடை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 4 பேர் ஈடுபட்டு நிலையில் மரூப் நசீர் மற்றும் ஷாகித் ஆகிய 2 பயங்கவாதிகளை பாதுகாப்பு படையினர் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக பாரமுல்லா சிறையில் அடைக்கபப்ட்ட நிலையில் நேற்று இரு பயங்கரவாதிகளும் விசாரணைக்காக பாரமுல்லா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இஸ்லாமிய மதத்தின் புனித மாதமான ரமலான் என்பதால் நோன்பு இருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். இதனால், அதிகாலை நோன்புக்கு முன் பயங்கரவாதிகளுக்கு போலீசார் உணவு கொடுத்துள்ளனர்.
அப்போது, போலீசாரை திசைதிருப்பி 2 பயங்கரவாதிகளும் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரின் உதவியுடன் தப்பியோடிய 2 பயங்கரவாதிகளையும் தேடி வருகின்றனர்.
கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.