ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட வேண்டும்
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் விலை உயர்ந்த சேலைகளை ஏலம் விட கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
சேலைகள்
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம்
இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் 2-வது முறையாக இதே கோரிக்கையை அதாவது அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், 'ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகள் விரைவாக சேதம் அடையக்கூடியவை. மற்ற பொருட்கள் எவ்வளவு நாட்கள் இருந்தாலும் ஒன்றும் ஆகாது. அதனால் சேலைகள் உள்பட அந்த 3 பொருட்களையும் விரைவாக ஏலம் விடுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பினேன். தற்போது 2-வது முறையாக அதே கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளேன். அந்த பொருட்கள் ஏலம் விடப்படும் வரை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கொண்டே இருப்பேன்' என்றார்.