ராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-08-24 09:52 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கைர்தால்-திஜாரா மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் உள்ள சென்டிரல் மார்க்கெட்டில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 7.30 மணியாளவில் ஒரு காரில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கியுடன் அந்த நகைக்கடைக்குள் நுழைந்தது.

அப்போது கடையில் உரிமையாளர் ஜெய் சோனி, அவரது சகோதரர் மதுசூதன் சோனி மற்றும் காவலர் சுஜன் சிங் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்களை துப்பாக்கி முனையில் வைத்து நகைகளை சூறையாடினர் மற்றும் தடுக்க வந்த மூவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ஜெய், மதுசூதன் மற்றும் சுஜன் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்த அந்த மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் நகைக்கடை உரிமையாளர் ஜெய் சோனி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் நகைக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஜெய்ப்பூர் ஐ.ஜி. அனில் குமார் தெரிவித்துள்ளார். வெறும் 4 நிமிடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நகைக்கடையை கொள்ளையடித்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அங்குள்ள வணிகர் சங்கம் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடக்கும் இடத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. பாபா பாலக்நாத் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து வணிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்