ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.11 லட்சம் நகைகள் திருட்டு

பெலகாவியில் இருந்து உப்பள்ளிக்கு வந்தபோது ஓடும் பஸ்சில் பெண்ணின் பையை கிழித்து ரூ.11 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-12-16 21:36 GMT

உப்பள்ளி:-

பை கிழிக்கப்பட்டு இருந்தது

தார்வார் மாவட்டம் உப்பள்ளி நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பைலஹொங்கலா நகரில் வசித்து வருபவர் சுஜாதா. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெலகாவியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலையில் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அவர் பெலகாவியில் இருந்து அரசு(கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்சில் உப்பள்ளி நோக்கி வந்தார். பஸ்சில் வரும்போது அவர் ரூ.10.88 லட்சம் மதிப்பிலான தனது நகைகளை, பையில் வைத்திருந்தார்.

அந்த பையை தான் அமர்திருந்த இருக்கைக்கு அடியில் அவர் வைத்து பஸ்சில் பயணித்து வந்தார். அவர் உப்பள்ளி பஸ் நிலையத்தில் வந்து இறங்கியபோது அவரது பை கிழிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பையை திறந்து பார்த்தார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

அப்போது பையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.10.88 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் சுஜாதா கவனிக்காத வேளையில் அவரது பையை கிழித்து நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டது சுஜாதாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி சுஜாதா, உப்பள்ளி ஏ.பி.எம்.சி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்