துணை சபாநாயகர் மரணம்: பா.ஜனதாவின் மக்கள் சங்கல்ப யாத்திரை ரத்து

துணை சபாநாயகர் மரணம் அடைந்ததால் பா.ஜனதாவின் மக்கள் சங்கல்ப யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-23 21:10 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் துணை சபாநாயகராக இருந்த ஆனந்த் மாமணி நேற்று முன்தினம் நள்ளிரவு புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். பா.ஜனதா கட்சி சார்பில் சவதத்தி தொகுதியில் 3 முறை போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) நடைபெற உள்ளதால், மாநிலத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் விதமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா இணைந்து பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சங்கல்ப யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த யாத்திரை நேற்று கலபுரகி மாவட்டம் சித்தாபுரா மற்றும் அப்சல்புராவில் நடைபெற இருந்தது. ஆனால் துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி மறைவு காரணமாக கலபுரகி மாவட்டம் சித்தாபுரா மற்றும் அப்சல்புராவில் நடைபெற இருந்த மக்கள் சங்கல்ப யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்த யாத்திரையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்