ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் மாரடைப்பால் சாவு
சட்டசபை தேர்தலில் சிந்தகி தொகுதியில் போட்டியிட இருந்த ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பெங்களூரு:
ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்
கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபக்கம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.
இதனால் அனைத்து கட்சிகளும் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம், யாத்திரைகளை நடத்தி வருகின்றன. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 110 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதன்படி விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் சிவானந்த் பட்டீல் சோமஜாலா (வயது 54) என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ வீரர்
அவர் அலமேலா தாலுகா சோமஜாலா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மேலும் சிவானந்த் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தால் ஓய்வுக்கு பிறகு அவர் அரசியலில் நுழைந்தார். தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) சார்பில் மாநிலம் முழுவதும் பஞ்சரத்னா யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் நாகடானா தொகுதியில் பஞ்சரத்னா யாத்திரை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குமாரசாமியுடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும், இதில் சிந்தகி தொகுதி வேட்பாளரான சிவானந்த் பட்டீலும் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் மாலையில் யாத்திரையை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
மாரடைப்பால் சாவு
வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் உடனடியாக சிந்தகி டவுன் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
குமாரசாமி நேரில் அஞ்சலி
இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், கட்சியினர் துயரத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே சிவானந்த் பட்டீல் மறைவுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கட்சி வேட்பாளர் சிவானந்த் பட்டீலின் திடீர் இழப்பு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைந்த இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் குமாரசாமி நேரில் சென்று சிவானந்த் பட்டீல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து சிவானந்த் பட்டீலின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.
சிவானந்த் பட்டீல் மறைவுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.