கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் - குமாரசாமி
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.;
தேவை இல்லை
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு இடையே குமாரசாமி நேற்று துமகூரு சித்தகங்கா மடத்திற்கு சென்று அங்கு மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் சமாதியில் பூஜை செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவில் ரவுடிகள் சேருகிறார்கள். இந்த விஷயத்திற்கு நான் முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிற கட்சிகளில் யாரை சேர்க்கிறார்கள், யாரை நீக்குகிறார்கள் என்பது எங்களுக்கு தேவை இல்லை.
தீவிரமாக பாடுபடுவேன்
துமகூரு தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் கோவிந்தராஜ் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 2 முறை தோல்வி அடைந்துள்ளார். அதனால் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தலில் துமகூரு தொகுதியில் அவருக்கு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. துமகூருவில் 11 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். அதற்காக நான் தீவிரமாக பாடுபடுவேன்.
எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். நான் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்வேன். ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இந்த சுனாமியில் பிற கட்சிகள் அடித்து செல்லப்படும். சித்தராமையா வருணா உள்பட எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவர் கடுமையான போட்டியை எதிர்கொள்வார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.