பா.ஜனதா எம்.எல்.ஏவை கண்டித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் போராட்டம்

பவானி ரேவண்ணா குறித்து ஒருமையில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-03 20:54 GMT

ஹாசன்:-

பவானி ரேவண்ணாவை ஒருமையில் பேச்சு

ஹாசன் மாவட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏவிற்கு எதிராக ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் ரகு ஹொங்கரே, முன்னாள் எம்.எல்.ஏ.கவுரி கவுடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஹேமாவதி சிலையில் இருந்து பேரணியாக சென்ற போராட்டகாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

அப்போது பேசிய ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கவுரிகவுடா கூறியதாவது:- பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., ஜனதா தளம்(எஸ்) ஆட்சியை ஆதரித்து பவானி ரேவண்ணா மற்றும் ரேவண்ணாவை ஒருமையில் பேசியுள்ளார். இது அரசியல் நாகரிகம் அற்ற செயல். பா.ஜனதா கட்சியில் ஒழுங்கம் இல்லை என்பதை இது காட்டுகிறது.

இதற்கு முந்தைய காலங்களில் எம்.எல்.ஏக்கள் மரியாதையுடன் நடந்து கொண்டனர். ஆனால் இப்போது ஒருமையில் பேசுபவர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். பிரீத்தம் கவுடாவின் இந்த பேச்சை கண்டிப்பதுடன், அவர் தான் பேசியது தவறு என்று பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

மேலும் பெண்களை இழிவாக பேசும் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

இந்த போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்