காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. அவையில் இந்தியா பதில்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-11 05:30 GMT

ஜெனிவா,

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நடந்த உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு செயற்குழுவின் 41வது அமர்வில்  இந்தியாவின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

அப்போது பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். ஆகஸ்ட் 2019 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல், காஷ்மீர் பகுதிக்கு சுதந்திரமான பார்வையாளர்களுக்கான அணுகல் உள்ளிட்ட ஆறு பரிந்துரைகளை பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு நேற்று வழங்கியது.

அதற்கு பதிலளித்து பேசிய இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும். ஜம்மு காஷ்மீரின் அனைத்து சுற்று வளர்ச்சிக்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்ட மாற்றங்களுக்குப் பிறகு, அந்த பிராந்திய மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களை போல தங்கள் முழு திறனையும் இப்போது அவர்களால் உணர முடிகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருந்த போதிலும், ஆகஸ்ட் 2019 முதல் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்கனவே 16 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்